அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த பிப்ரவரி மாதம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அவதூறு பேச்சு தொடர்பாக தலித் அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவதூறு வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது, அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி சீமான் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ததை அடுத்து, சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது ஈரோடு மாவட்ட நீதிமன்றம்.