ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது குற்றச்சாட்டு..!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பாக சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கியது தொடர்பான வழக்கில் தான் தற்போது ஹண்டர் பைடனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜோ பைடன். அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், மீண்டும் அங்கு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மீண்டும் போட்டியிட ஜோபைடன் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலின் போது ஜோ பைடனுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது, ஜோ பைடனின் மகன்களில் ஒருவரான ஹண்டர் பைடன் கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வரி முறைகேடு செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததகவும் வழக்கு தொடரப்பட்டது.

இது அதிபர் தேர்தலின் போது பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில், அமெரிக்காவின் , டெலவாரே நீதிமன்றத்தில் ஹண்டர் பைடனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி வாங்கும் போது போதைப் பொருளை பயன்படுத்தியதையும் ஹண்டர் பைடன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

இதையடுத்து போலி வாக்குமூலம் அளித்ததாக ஹண்டர் பைடனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹண்டர் பைடனின் பிசினஸ் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக தகுதி நீக்க விசாரணையை மேற்கொள்ள அமெரிக்க சபாநாயகர் அனுமதி அளித்து இருக்கும் நிலையில், தற்போது ஹண்டர் பைடனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.