சத்தியமங்கலம் : தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் 1591 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக 425 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பயனாளிகளிடம் காணொலி காட்சியில் உரையாடினார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சாவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். இலங்கைத் தமிழர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் மனிஷ், சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, விஜயலட்சுமி, பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ரங்கராஜ் மற்றும் இலங்கை தமிழர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.