சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வங்கிக்கு வந்த சத்தியமங்கலம் ஓம் சக்திநகரை சேர்ந்த முருகன் (44) என்ற நபர் புதியதாக கணக்கு துவங்கி தங்க நகையை அடகு வைத்து நகை கடன் பெற வேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் கூறியதை அடுத்து அவர் வைத்திருந்த நகைகளை நகை மதிப்பீட்டாளர் மூர்த்தியிடம் கொடுத்த போது வங்கி கணக்கு துவங்கியதற்காக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படத்தை பார்த்த வங்கி ஊழியர் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. வங்கி ஊழியர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த எச்சரிக்கை செய்தியில் கரூரில் உள்ள சுங்க கேட் கூட்டுறவு வங்கி கிளையில் போலி நகையை அடகு வைத்து நகை கடன் பெற வந்த நபர் போலி நகையை கொடுத்த போது வங்கி ஊழியர்கள் இந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதாகவும், இந்த நபர் வேறு எங்காவது வங்கி கிளைக்கு போலி நகையை அடகு வைத்து கடன் பெற முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாக அந்த நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவிட்டதை கவனத்தில் வைத்திருந்த வங்கி ஊழியர்கள் ஏற்கனவே வாட்ஸ் அப் குரூப்பில் வந்த அந்த நபர் போலவே இருந்ததை அடையாளம் கண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக திடீரென வங்கியின் முன்பக்க கதவை இழுத்து மூடி அந்த நபரை கையும் களமாக பிடித்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடமிருந்து 42 பவுன் எடையுள்ள போலி நகைகள், போலி ஆதார் கார்டு, செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் போலி நகையை அடகு வைத்து ஏமாற்ற முயற்சித்ததாக வழக்கு பதிந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.