ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பரான தொட்டம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஒத்தப்பனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர். ராமகிருஷ்ணனுக்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில் அவரது தந்தைக்கு போன் செய்த மோகன்ராஜ், உங்கள் மகனுக்கு மது போதை அதிகமாகி விட்டது. ஆகவே அவர் ஓட்டி வந்த பைக்கை வந்து எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற ராமகிருஷ்ணனின் தந்தை ஐயா சாமி பைக்கை எடுத்துக்கொண்டு தொட்டம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். போதை தெளிந்து காலை பைக் எடுத்துச் செல்வதற்காக ராமகிருஷ்ணன் பெட்ரோல் பங்கில் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரிய வந்தது. பெட்ரோல் பங்கில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மோகன்ராஜ் இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மோகன்ராஜை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு பைக் உடன் வந்த மோகன்ராஜை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.