விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி வெறும் 20 மணி நேரத்தில் கோவை – நியூயார்க் பறக்கலாம்.!!

கோவையில் இருந்து மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளது. இதனால் இங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 20 மணி நேரத்தில் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றுமோர் விமான சேவையை ஏர் இந்தியா துவக்கவுள்ளது.
வருகிற டிச.,15 லிருந்து இந்த விமானம், வாரம் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது. தினமும் இரவு 9:35 மணிக்கு, கோவையில் புறப்படும் இந்த விமானம், 11:20க்கு மும்பையைச் சென்றடையும். மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கே (டி 2) இந்த விமானம் செல்வதால், அங்கிருந்து வேறு விமானம் மாறி, வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும். கோவையிலிருந்து ஒரே டிக்கெட்டாகப் பதிவு செய்தால், ‘சீம்லெஸ் கனெக்ட்டிவிட்டி’ என்ற முறையில், பொருட்களை விமானத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மும்பை ‘டி 2’வில், ‘இமிக்ரேசன்’ மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகளுக்குப் பின், விமானம் மாறிச்செல்லலாம். இதனால் கோவையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் சிட்டிக்கு, 19 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விட முடியும். அமெரிக்க நகரங்களுக்கு மட்டுமின்றி, லண்டன், முனிச், பாரிஸ், மொரிஷியஸ், ஆம்ஸ்டர்டாம், ரியாத், ஜெட்டா, எகிப்து, தோஹா, துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 20 வெளிநாட்டு நகரங்களுக்கு, இந்த ஏர் இந்தியா விமான சேவை, நல்லதொரு இணைப்பாக அமையும்.மும்பைக்கு 3 இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இது 6-வது விமான சேவையாகும். எந்தெந்த நேரம்…எந்தெந்த விமானம்?கோவையிலிருந்து மும்பைக்கு காலை 6:45 மணிக்கு, இண்டிகோ விமானம் முதல் சேவையைத் துவக்குகிறது. அதையடுத்து, ஏர் இந்தியா-காலை 9:00 மணி, விஸ்தாரா-மதியம் 2:30 மணி, இண்டிகோ-மாலை 4:45 மணி, ஏர் இந்தியா-இரவு 9:35 (டிச., 15 லிருந்து), இண்டிகோ-இரவு 10:20 மணி என மொத்தம் 6 விமானங்கள் கோவையிலிருந்து மும்பைக்கு இயக்கப்படுகின்றன.