பெங்களூரு, : கர்நாடக தலைநகர் பெங்களூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெங்களூரில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல், பொதுவாக ஜூன் – செப்டம்பர் மாதங்களில் துவங்கி, அக்டோபர் இறுதியில் முடிவடையும். ஆனால், இம்முறை பெங்களூரு நகரில் வெயிலும், குளிரும், மழையும் இணைந்ததால், மழைக்காலம் முடிந்த பின்னரும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து உள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், மற்றவர்களுக்கும் பரவுகிறது.’வைரஸ் காய்ச்சல் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இருக்கும்.
உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனாலும், பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், சரியான நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்’ என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். அறிகுறிகள் என்ன?வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு கடுமையான குளிர், மூக்கு ஒழுகுதல், இருமல், தலைவலி, உடல்வலி, தசைப்பிடிப்பு, மூட்டுகளில் வலி, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி, வயிற்று போக்கு ஏற்படும்.வயிற்று வலி, கண்களில் நீர் வடிதல், கண்கள் சிவத்தல் ஆகியவையும் வைரஸ் காய்ச்சல் அறிகுறியாகும். டெங்கு அறிகுறிகள் போன்று இருந்தாலும், பரிசோதனையின் போது, எதிர்மறையான அறிக்கை வரும்.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், கடந்த 10 நாட்களாக காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதுபோன்று, கே.சி.ஜெனரல், பவுரிங், விக்டோரியா ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், வெளி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை ‘வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்கள் கட்டாயம் முக கவசம் அணிதல்; சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்; கைகளை சுத்தப்படுத்துதல்; கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல்; சத்தான உணவு உட்கொள்ளுதல்; சுயமாக மருந்து எடுக்கக் கூடாது’ என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.