காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்… நள்ளிரவில் திக்.. திக்.. தாக்குதல்..

டெல் அவிவ்: காசா மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா மீதான ஏவுகணை தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது.

காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், விரைவில் படையெடுப்பை ஆரம்பிக்க உள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலும் கூட அதை இஸ்ரேல் ஏற்பதாகத் தெரியவில்லை

இதற்கிடையே காசா நகரம் இப்போது இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டு இருக்கிறது. என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்று இரவு காசா மீதான ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், இப்போது காசா இரு பகுதிகளாகப் பிளவுபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டாக பிளக்கப்பட்ட காசா: இப்போது வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என்று இரு தரப்பாகப் பிளந்து இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரேல் தரப்பு, ஹமாஸுக்கு எதிரான இந்த போர் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். காசா மீதான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காசா நகருக்குள் இஸ்ரேல் நுழைய வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன. தற்போது வரையும் வடக்கு காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காசா மீதான தாக்குதல் தொடரும் நிலையில், அங்கே டெலிகாம் மற்றும் இணையச் சேவைகள் மூன்றாவது முறையாக முடக்கப்பட்டன. காசா பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலுமாக முடங்கியுள்ளதை பாலஸ்தீனிய தொலைத்தொடர்பு நிறுவனமான பால்டெல் உறுதிப்படுத்தியது. காசாவில் முதல்முறையாகத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது 36 மணி நேரம் நீடித்த நிலையில், இரண்டாவது முறை அது சில மணி நேரம் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்: காசா நகரை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளிடம் இருந்து போர் நிறுத்தம் குறித்த அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இந்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் அமைந்துள்ள இரண்டு அகதிகள் முகாம்களைத் தாக்கிய நிலையில், அதில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தப் பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளதால் பொதுமக்கள் இங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், அகதிகள் முகாம் என்பதால் தாக்குதலை நடத்தாது என்றே பாலஸ்தீன மக்கள் கருதினர். இருப்பினும், ஹமாஸ் தளபதிகள் அங்கு மறைந்திருப்பதாகக் கூறி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது.

லெபனானிலும் பதற்றம்: காசாவில் இப்படி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், மறுபுறம் லெபனானிலும் மோதல் அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் ஒரு கார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகளையும் அவர்களின் பாட்டியையும் உயிரிழந்தனர். இது லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

இப்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஆரம்பித்த சண்டை என்பது அப்பகுதி முழுக்க விரிவடைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அப்படி நடந்தால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த மோதல் விரிவடையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.