நெல்லையில் பட்டியலின இளைஞர்களுக்கு நேர்ந்த வன்கொடுமை- தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை!!

திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் 2 பேருக்கு நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது.

திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இனத் இளைஞர்கள் மாரியப்பன், மனோஜ் குமார் ஆகியோரை கடந்த 30- ம் தேதி மது அருந்தி விட்டு நின்ற கும்பல் தாக்கியது. அவர்கள் இருவரிடம் இருந்தும் செல்போன் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்ததோடு அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் வன்கொடுமையில் ஈடுபட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து 6 பேரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேதிய ஆதி திராவிடர் ஆணைய இயக்குநர் ரவி வர்மன் திருநெல்வேலியில் நிகழ்ந்த வன் கொடுமை தொடர்பாக நேற்று விசாரணை மேற்கொண்டார். சம்பவம் நடைபெற்ற ஆற்றங்கரையை பார்வையிட்ட அவர், அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணி மூர்த்தீஸ்வரம் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டத்தின் பேரில் ஆய்வு செய்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பச் சூழல் குறித்தும் விசாரிக்கப் பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா, தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜாதி ரிதியான பிரச்சினைகளில் தீர்வு காண ஆணையத்தால் மட்டுமே முடியாது. பொதுமக்களிடம் விழிப்புணர்வும் அவசியம்.

வன் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் கல்வித் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாமதமாக கிடைக்கும் புகார்கள்: தென்காசி மாவட்டத்தில் காவல் துறை அதிகாரி பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு தகவல் வரும் நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட்டியலினத்தோர் பாதிக்கப்பட்டு அவர்கள் கொடுக்கும் வழக்குகளில் எந்த வித பாரபட்சமும் காட்டாமல் காவல் துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு கிடைக்கும் புகார்கள் அனைத்தும் தாமதமாகவே கிடைக்கிறது. பட்டியலின சமூகத்தினர் பாதிக்கப்பட்டால் கடிதம் மூலமாக தங்களது புகார்களை தேசிய பட்டியல் இனத்தோருக்கான ஆணையத்துக்கு அனுப்பலாம். பல்வேறு வழக்குகளை ஆணையமும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பட்டியலின சமூகத்துக்கு எதிரான புகார்கள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தமிழகத்தை ஒப்பிடும் போது பல மாநிலங்களில் இருக்கும் அதே நிலை தான் தமிழகத்திலும் நீடித்து வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஒரு நபர் ஆணையம், நீதிமன்றம் உள்ளிட்டவையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய பட்டியல் இனத்தோருக்கான ஆணைய இயக்குநர் அறிக்கை கேட்டதன் அடிப்படையில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவண குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.