நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி சாலையில் செளபாக்யா நகரில் காந்திராஜன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரி ஊழியரான இவரது வீட்டிற்குள், வாஷிங் மெஷின் அருகே ஒரு அரிய வகை விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்திராஜன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப், போக்குவரத்து அதிகாரி வெங்கடேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் மூலையில் பதுங்கி இருந்த அந்த பெரிய விலங்கை பார்த்தபோது, அது உடும்பு என்பது தெரியவந்தது. பின்னர் விலங்குகள் பிடிக்கும் கருவியை வைத்து லாபகரமாக அந்த உடும்பை பிடித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் அந்த உடும்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் உடும்பை வனப்பகுதிக்குள் ஓட விட்டனர். இதனால் இப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.