சனாதன வழக்கு: நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது: உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்.!!

சனாதனத்துக்கு எதிராக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க., எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் கோ வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது, ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதல்-அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், அந்த அதிகார எல்லையை தடை குறிப்பிட்டார்.

அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை, நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது என்றும் வாதிட்டார். அதனால், சனாதனத்துக்கு எதிராக பேசியதாக இந்த வழக்கை தொடர முடியாது, பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் அதேவேளையில், மாற்றுக் கருத்து உள்ளவர்களின் கருத்துரிமையையும் பாதுகாப்பது முக்கியம். அந்த கருத்துரிமையை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் கடமை ஆகும் என்றும் சுட்டிக்காட்டினர் .

சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளது. அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார் எனத் தெரிவித்தார். திருமணத்துக்கு முன்பு உறவு குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து குஷ்பூ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால், அவரது கருத்து தவறு என்று பொதுவெளியில் பேசலாமே, அதற்காக குற்றவழக்கு ஏன் தொடர வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

பேச்சுரிமை என்பது ஒருவரின் அடிப்படைய மனித உரிமை. ஒருவரது பேச்சுரிமை கட்டுப்படுத்த அரசியல் அமைப்புச்சட்டத்தில் 8 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில், மனுதாரர் இந்த வழக்கில் கூறியுள்ள காரணம் இடம்பெறவில்லை. தேவை இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர் என்றார். மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய பெருமாள் முருகன் வழக்கில், ஒருவரது கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும்.

அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை வாங்க வேண்டாம்… படிக்க வேண்டாம் எனவும், ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடந்துள்ளது. ஏராளமான அறிஞர்கள் பேசியுள்ளனர். அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் கேட்க வேண்டும்? இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகேட்டுக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.