திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் சம்பத், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். என்னை அலைகழிக்கும் வகையில் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசுu வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ”பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது போன்ற செயல்களால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் 7 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றார். இதையேற்று அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்