கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வேலு என்ற வேலுசாமி (வயது 29). இவர் அவரது வீட்டில் புறா வளர்த்து வந்தார் .அந்த புறாக்கள் ஒரு பாழடைந்த வீட்டில் தங்குவது வழக்கம். இதனால் அவர் அந்த பாழடைந்த வீட்டுக்கு அடிக்கடி செல்வார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி வேலுசாமி அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அதன் அருகே 35 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணை அவர் பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதை அறிந்த வேலுசாமி அந்த வீட்டின் மேற்கூறை ஓடுகளைப் பிரித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது .அதன் பேரில்போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும், பாழடைந்த வீட்டுக்குள் அடைத்து வைத்தல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து வேலுசாமியை கைது செய்தனர்..இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜிஷா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேலுசாமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததற்கு 10ஆண்டு சிறை தண்டனையும் , ரூ 500 அபராதமும், அந்தப் பெண்ணை பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்ததற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் .இதை யடுத்து வேலுச்சாமியை போலீசார் பலத்த பாதுகாப்புடன்அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.