ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது. நகைகள் – வெள்ளி மீட்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், எல்.ஐ.சி. ஏஜென்ட்.’ இவரது மனைவி பள்ளிக்கூட ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த 25ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். மதியம் 12:30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயபால் உள்ளே சென்று பார்த்தபோது நகை மற்றும் பணம் கொள்ளையடிக்க பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 25ஆம் தேதி பொன்னே கவுண்டன் புதூரில் இருந்து தென்னம்பாளையம் வழியாக குன்னத்தூர் புதுவலசுபகுதிக்குஇருசக்கர வாகனத்தில் வந்த 2பேர் ஒருவரை ஏற்றி சென்றதும், அவர்கள் ஜெயபால் வீட்டில் கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் குன்னத்தூர் புதுவலசு பகுதியைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் மகன் இம்ரான் (வயது 37) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் நாகராஜ் (வயது 47) சுபான் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்செங்கோட்டிலும் வீடு புகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள், ஒரு கலர் டிவி, ஒரு கிலோ வெள்ளி பொருட்களைபோலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.