புயல் நிவாரண பணி செய்ய திருச்சி மாநகராட்சி குழுவினர் சென்னை சென்றனர்.

புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சியில் இருந்து மாநகராட்சி பணியாளர்கள் 250 பேர் அடங்கிய குழுவினர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழு வீச்சில் மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தமிழக அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகளுக்காவும், நிவாரணப் பணிகளுக்காகவும் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சியிலிருந்தும் சென்னைக்கு பிரத்யேக குழு அனுப்பப்பட்டுள்ளது.
இக்குழுவில் 250 தூய்மைப் பணியாளா்கள் மற்றும் 10 தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், மூன்று சுகாதார அலுவலா்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் 5 பேருந்துகள் மூலம் திங்கள்கிழமை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.
திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த குழுவினரை மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் ஆகியோா் வழியனுப்பி வைத்தனா்.
அப்போது, மண்டலத் தலைவா் துா்கா தேவி, நகா் நல அலுவலா் மணிவண்ணன், மாநகராட்சி உதவி ஆணையா்கள் மற்றும் சுகாதார அலுவலா்கள் பங்கேற்றனா். திருச்சி செய்தியாளர் H. பஷீர்