தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. இவர் தற்போது, தங்களுக்குச் சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் நேரு எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவர். அதேசமயம், அவரது ஆதரவாளர்கள் முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வரை, அனைவருக்கும் அவரவரின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார், அமைச்சர் நேரு.
அதேபோல், அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவும் கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் தீவிர பணிகளை ஆற்றி வருகிறார். ஆகையால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அனைவரும், அருண் நேரு கட்சியில் பதவிக்கு வர வேண்டும் என்றும் அரசியலில் கால் பதிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அவர்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அருகே திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பேசுகையில், அருண் நேரு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிட வேண்டும். அதிலும் குறிப்பாக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும்.
அவ்வாறு போட்டியிட்டால், இதுவரை யாரும் வெற்றி பெறாத அளவிற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்கு திமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்” என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இவருடைய பேச்சு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனைத் அடுத்து திருச்சி திமுக வட்டாரங்கள் தெரிவித்த தகவலில், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். அதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. நிச்சயம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் அருண் நேரு வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அருண் நேருவின் பிறந்தநாளை திமுக கட்சியினர், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் திருச்சி மாவட்டம் முழுவதும் அருண் நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்கள், பதாகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வைக்கப்பட்ட பதாகைகளில், “Man Power of Trichy” என்றும், “2024ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் கதாநாயகரே” என்ற வசனங்களுடனும், பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே அருண் நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அனைத்து பதாகைகளிலும் MP Trichy என்று எழுதப்பட்டுள்ளதால், அருண் நேரு வருகின்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட உள்ளாரா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு கட்சியின் தலைமை அனுமதி அளித்தால் மீண்டும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்து வருகிறார்.
இதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா? என்ற ஒரு கேள்வி எழுந்த நிலையில், தற்போது அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதாகைகளில் பொறிக்கப்பட்ட வசனங்கள், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் தொகுதி எம்.பி.யாக தற்போது இருப்பவர் பாரிவேந்தர் என்றழைக்கப்படும் ஐ.ஜே.கே. கட்சி நிறுவனர் பச்சமுத்து. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் வரவிருக்கும் தேர்தலில் இவரது கூட்டணி நிலைப்பாடு மாறலாம் என்பதால், திமுக கூட்டணியில் பெரம்பலூர் யாருக்கு என்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கே.என்.நேருவின் சொந்த ஊரான லால்குடி பெரம்பலூர் தொகுதிக்குட்பட்டது என்பதால் இதுவும் அருண் நேருவுக்கு சாதகமாக அமையும். ஆனால் தற்போது திருச்சியின் எம்.பி. என சிக்னல் கொடுக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் திமுகவில் மட்டுமல்ல, காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்துகின்றன.