திருச்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார் அமைச்சர்…

திருச்சி மாநகராட்சி 42-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆலத்தூா் பகுதியில் உள்ள இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு, அப்பகுதியில் உள்ள நூலகத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆலத்தூரில் மீண்டும் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 31.56 லட்சம் ஒதுக்கி, 2 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, அடிக்கல் நாட்டி கட்டடப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட செயலாளா் மதிவாணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து பெல் கைலாசபுரம் பாய்லா் தொழிற்சாலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு 253 விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் வழங்கினாா்.
இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலா் சங்கரநாராயணன், பள்ளி தலைமையாசிரியா் மணியரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.