தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றியத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றியத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக்கூட்டம், மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில், மாநில நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, மேகராஜ், வழக்கறிஞர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில், விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களின் உரிமைகளை முன்னிறுத்தி கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், இரண்டு மடங்கு லாபகரமான விலையை விவசாய விளைபொருட்களுக்குப் பெறுவது. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாய உணவுப் பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக் கூடாது. கோதாவரி – காவேரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். காவிரி – அய்யாறு இணைப்பு. மாதம் விவசாய உதவித் தொகையான ரூபாய் 500-ஐ மாதம் ரூபாய் 5ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
குமாரவேலு தலைமையில் குளித்தலையிலிருந்து சென்னைக்கு வருகின்ற 25ஆம் தேதி மேற்கொள்ளப்படும் நடைப்பயணத்தில் கலந்து கொள்ளுவது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பொன்னணியாறு அணைக்குக் கால்வாய் வெட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி விவசாயிகளைக் காப்பாற்றப் போராட்டம். காவிரி கொள்ளிடம் வழியாக வெள்ளநீர் கடலில் சென்று கலக்காமல், காவிரியிலும், கொள்ளிடம் ஆற்றிலும் 1 கி.மீ-க்கு ஒரு தடுப்பணை என்று 100 தடுப்பணைகளைக் கட்டி நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டுகிறோம். தனி விவசாயி பாதிக்கப்பட்டாலும் காப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகள் போராடக்கூடாது என்றும் மீறி போராட்டத்தைக் கையில் எடுத்தால் விவசாயிகளைக் குண்டர் சட்டத்திலும், விவசாயச் சங்கத் தலைவர்கள் மேல் 30க்கு மேல் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்தும் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்துவது
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் இந்தியா பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் விவசாயிகள் அவருக்கு எதிராகப் போட்டியிடுவது” போன்ற பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஒரு மனதாக முடிவு செய்தனர். தொடர்ந்து கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயச் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறியதாவது, விவசாயிகளைப் பழிவாங்கும் எண்ணத்தில் திமுக அரசு செயல்படுகின்றது. விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் அனைவரும் அடிமை என நினைத்து எதைக்கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்ற போக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளுக்குக் காரணம் என்னவென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம். மேலும், உரியப் பதில் கிடைக்காவிட்டால் காவல் நிலையத்தை முற்றுகையிடவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார். பேட்டியின் போது விவசாயிகள் நிர்வாகிகள் திரளாய் கலந்து கொண்டனர்.