கோவை அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு. 2003 லிட்டர் எரி சாராயம்-1,776 மது பாட்டில்கள் பறிமுதல் …

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவுபோலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியாவுக்கு ரகசிய தகவல் வந்தது..அதன் பேரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமல் பிரிவு டி,எஸ்.பி. ஜனனிப்ரியா, இன்ஸ்பெக்டர் சுஜாதா, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், காரமடை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், தனிப்பிரிவு போலீசார் ராமமூர்த்தி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக மதுபானங்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதனை யடுத்து அந்த வீட்டிற்குள் அதிரடியாக தனிப்படை போலீசார் நுழைந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 65 கேன்களில் இருந்த 2,310 லிட்டர்எரி சாராயம் மற்றும் 1,776 போலிமதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை யடுத்து அந்த போலி மது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரமடை தொட்டிபாளையம், செந்தூர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த மதுபான ஆலையில் 1, 340 போலி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலைக்கு மூடி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காரமடை தொட்டிபாளையத்தில் போலி மதுபான ஆலை வழக்கில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பொட்டாஞ்சிரா பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 29) சந்தோஷ் குமார் ( வயது 42) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான அனில் குமார் கேரள மாநில போலீசாரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று போலி மதுபான ஆலைகள் செயல்பட்டு வந்த தொட்டிபாளையம், செந்தூர் நகர் ஒன்னி பாளையம், ராம்நகர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை காரமடை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அனில் குமார் என்பவர் கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோவை மாவட்ட போலீசார் காவலில்எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.அவரை விசாரித்தால்போலி மதுபான ஆலை குறித்த முழு விவரங்கள் தெரியவரும். இந்த வழக்கை மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி, கோவை மதுவிலக்கு அமல்பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜனனி பிரியா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது..