தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது) இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பம்பையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழகத்தில் இருந்தும் செல்லும் பக்தர்களின் உதவிக்காக 2 அதிகாரிகள் சபரிமலையில் பணியில் உள்ளனர். சபரிமலை பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 10 லட்சம் தண்ணீர் கேன்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன என்றார்.