சென்னை: சபரிமலைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை விரைவாக அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, சபரிமலைக்கு 20 லட்சம் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருவிக நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி, புளியந்தோப்பு ஆகிய பகுதியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 3500 குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, புடவை, பால், ரஸ்க், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தாயகம் கவி எம்எல்ஏ, மேயர் பிரியா ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் கோரியுள்ள ரூ.12,000 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கும் என நம்புகிறோம்.
தமிழக அரசின் பணியை ஒன்றிய குழு பாராட்டி விட்டு சென்றுள்ளது. ரூ.6000 நிவாரணம் அறிவித்த முதல்வரை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். மழை பெய்தபோது வசைபாடியவர்கள் கூட தற்போது முதல்வரை வாழ்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பான விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து அதிகாரிகள் ஒன்றிய குழுவிடம் வழங்கி உள்ளனர். சபரிமலைக்கு பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையுடன் பேசி கூடுதல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு செயல் அலுவலர் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் சபரிமலையில் நிரந்தரமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். தமிழக பக்தர்களுக்கு உதவி செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். சபரிமலைக்கு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 10 லட்சம் தண்ணீர் பாட்டில்களை விரைவாக அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்கு எந்தவிதசிரமமும் இல்லாமல் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.