திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இது குறித்து அறிக்கையில் கூறியது : 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கின்றோம். 2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கடந்த அக்டோபர் 4 ந்தேதி வெளியிட்ட அறிவிப்பும் இன்னும் செயல்படுத்தவில்லை. 13 கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரிவதை கைவிட்டு, இனி காலமுறை சம்பளம் வழங்கவேண்டும். மனிதாபிமானம் கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் சட்டசபையில் இதை வலியுறுத்திவிட்டது. எதிர்கட்சியாக திமுக இருந்தபோது வலியுறுத்திவந்த கோரிக்கை தான் இது. ஆளும்கட்சியாக திமுக வந்தும் ஆயிரம் நாளை நெருங்கும்போதும் இன்னும் 181 வது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதனால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களும் கவலையிலும் வேதனையிலும் தவிக்கின்றோம். இதனை நேரிலும், கடிதமாகவும், சமூகவலை தளத்திலும் முறையிட்டு தான் வருகின்றோம். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக முதல்வர் அவர்கள் ஆணையிட்டால் மட்டுமே விடியல் கிடைக்கும்.