மாநில அளவில் நடக்கும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு: ஆலோசனைக்கு பின் கார்கே பேட்டி…

டெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு எப்படி நடக்கும் என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசினார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து “இந்தியா” கூட்டணிக் கூட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் பெங்களூர், மகாராஷ்டிராவின் மும்பையில் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் “இந்தியா” கூட்டணி என்பதை அதை உருவாக்கிய கட்சிகளே மறந்துவிட்டன. இது “இந்தியா” கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து டிசம்பர் 19-ல் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்த்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் சமூகமாக நடந்தது. 3 மணி நேரம் நீடித்த கூட்டத்தில் அனைத்து விவரங்களையும் விவாதித்தோம். கட்டட திறப்புக்கு செல்லும் பிரதமர் நாடாளுமன்றம் வர மறுக்கிறார். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு? வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும். தொகுதி பங்கீடு என்பது மாநில அளவில் நடைபெறும். அதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய அளவில் கொண்டு வரப்படும். முதலில் நாம் வெற்றி பெற வேண்டும். பிறகு பிரதமர் யார் என்பதை ஜனநாயக ரீதியாக எம்.பிக்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.