திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை வைகுண்ட ஏகாதசி பெருவிழா…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12-ம் தேதி இரவு துவங்கியது. இதைத் தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13-ம் தேதி காலை துவங்கியது.
தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் தெள்ளியீர் பாசுரம், முத்துக்குறி-வியாக்யானம் நாளின் அபிநயத்திற்கேற்ப முத்துக்கொண்டை அலங்காரத்தில், முத்து கபாய், முத்து நேர் கிரீடம், பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை, முத்து அபய ஹஸ்தம், முத்து கர்ண பத்ரம், முத்து திருவடி, 2 வட முத்து மாலை, பின் சேவையில் முத்தங்கி அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார். இன்று (22-ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
நாளை அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 23-ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29-ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜனவரி 1-ம் தேதி தீர்த்தவாரியும், 2-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீரங்கத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்தில் நின்று செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.