திருச்சி சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி…

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது.
இந்நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.951 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப். 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். இப் பணிகள் 2021-ஆவது ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர விமானநிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் 2021, 22, 23 ஆகிய மூன்றாண்டுகளும் தள்ளிப்போயின. அடுத்தடுத்து 2 அல்லது 3 முறை திறப்பு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலும் பணிகள் முடிவடையாததால் திறப்பு விழா நடத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக நடைபெற்ற பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் 60 ஆயிரத்து 723 ச.மீ. பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாளக்கூடிய வகையில் குடியேற்றப்பிரிவினருக்கான 40 செக் அவுட் மற்றும் 48 செக் கவுன்ட்டர்கள், விமானங்கள் நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ் (விமானத்திலிருந்து முனையத்தில் நுழையும் பகுதி), 26 இடங்களில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), சுங்கத்துறையினருக்கென 3 சோதனை மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகளுடன், விமான நிலைய வளாகத்தில் சுமார் 1,000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேசத்தின் நாகரிகம், கலாசாரம், பண்பாடுகளை பறைசாற்றும் விதமாக நிலைய வளாகத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இதேபோல, வருகை புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் புதிய முனையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதுஇதுதவிர ரூ.75 கோடி செலவில் சுமார் 42.5 மீ உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதுஇத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த புதிய முனையம் ஜனவரி 2 -ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். விமான நிலைய வளாகத்தில் பாஜக முக்கிய பிரமுகர்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் போலீசார் கடந்த இரு நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் 38 -ஆவது பட்டமளிப்பு விழாவிலும், பிரதமர் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கும் பட்டங்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான வாய்ப்புகளும் இந்த பயணத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மோடியை சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் வருகை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.