கால மாற்றத்திற்கு ஏற்ப, உடலை மறைக்கும் சுடிதாரும் அணியலாமே என்ற முணுமுணுப்பு ஆசிரியைகளிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைகள் தங்களுக்கு ஏதுவான உடையை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அணிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியைகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சுடிதார் அணிவதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனை வரவேற்கும் வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பள்ளி ஆசிரியைகள் அனைவரும் தாங்கள் வழக்கமாக அணிந்து வரும் சேலைக்கு பதில் அனைவரும் ஒரே மாதிரியான சுடிதார் அணிந்து வந்தனர். இது ஆசிரியைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அனைத்து ஆசிரியைகளும் தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.