கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டது : சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…

காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது நிலையில் நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (வயது 58) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீப காலமாக தமிழகத்தில் கொரோன தோற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை, சுகாதார துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றைக்கையில் “காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும், பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், பரிசோதனை அவசியம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்குள்ளானவர்கள், இன்ப்ளுயன்ஸா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களிடமும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். மேலும்  செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் கூறியதாவது , ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புதிய வகை கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இணைநோய் உள்ளவர்கள் , குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். 1.25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது. 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்