ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் ராகி தலைநகராக மாறியது…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் கேப்பை தலைநகர்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் சுஷாந்த் கௌரவ். நக்ஸல் அட்டூழியங்களாலும் வறுமையின் கொடுமையினாலும் ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டம் வறுமைக்கோட்டின் மிகக் கீழே இருந்தது. வளமான நிலம் இருந்தும் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை. ஒருபுறம் விளைந்த பயிர்களை நக்ஸலைட்டுகள் வந்து வாரிச்சுருட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். மறுபுறம் நக்ஸலைட்டுகளுக்கு உணவு விளைவித்துத் தருவதாக அரசு அதிகாரிகள் கெடுபிடி. வெறுத்துப்போன விவசாயிகள் விவசாயத் தொழிலை விட்டுவிட்டு உண்ண உணவில்லாமல் தவித்து வந்தனர். அப்போதுதான் கும்லா மாவட்டத்தின் துணை ஆட்சியரான சுஷாந்த் கௌரவ் இந்த மக்களுக்கு விடிவு தரும் ஒரு தெய்வமாக வந்து சேர்ந்தார். கும்லா மாவட்டத்தில் பெரும்பான்மையாக பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அங்கு குறைந்த அளவே மழை பெய்யும் என்பதால் இருப்பதெல்லாம் வானம் பார்த்த பூமியாக இருந்தது. மழை பெய்தால் உணவுக்காக நெல்லை சாகுபடி செய்தனர். அவர்களுக்கு முதன் முதலாக கேப்பையை அறிமுகம் செய்து வைத்தார் சுஷாந்த் கௌரவ். கேப்பையில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்துகளால் அதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருப்பதை எடுத்துச் சொன்னார். சிறுதானிய ரகத்தைச் சேர்ந்த கேப்பையை சாகுபடி செய்வதற்கு அதிகத் தண்ணீர் தேவைப்படாது. எனவே தேசிய விதைகள் கார்ப்பரேஷன் மூலம் தரமான கேப்பை விதைகளை வாங்கித் தந்து அதைப் பயிரிடும்படி கும்லா மக்களிடம் அறிவுறுத்தினார். இன்றைக்கு கும்லா மாவட்டத்தில் கேப்பை பயிர் செழித்து வருகிறது. சிறப்பான விளைச்சலைத் தருகிறது. 1600 ஏக்கர் நிலத்தில் தொடக்கத்தில் பயிரிடப்பட்ட கேப்பை இப்போது 3600 ஏக்கர் நிலத்தில் விளைகிறது. இதனிடையே சகி மண்டல் சமூக் என்ற பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கேப்பை கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜார்க்கண்டில் முதல் முறையாக கேப்பையை பதனிடும் மையம் நிறுவப்பட்டது. அங்கு விளையும் கேப்பை மூலம் கேப்பை லட்டு, கேப்பை காராசேவு, கேப்பை மாவு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் பெருகியதோடு மக்களின் உடல்நலத்துக்கான புரோட்டின், கால்சியம், இரும்பு போன்ற உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவும் கிடைத்தது. இன்றைக்கு நாட்டிலேயே மிக அதிகளவில் கேப்பை ஜார்க்கண்டின் இந்த கும்லா மாவட்டத்தில்தான் விளைகிறது. இதன்மூலம் நாட்டின் கேப்பை தலைநகர் என்ற பெருமையையும் பெற்றது. இதற்கெல்லாம் மூலகாரணமான கும்லா துணை ஆட்சியர் சுஷாந்த் கௌரவ்வைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு பொது நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் அதிகாரி என்ற விருதை வழங்கி கௌரவித்தது.