மம்தாவை சீண்டும் மாநில காங்கிரஸ்: இந்தியா கூட்டணி’க்கு வேட்டு வைக்கும் மேற்கு வங்கம்…

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான மோதலால், ‘இந்தியா கூட்டணி’க்கு முதல் வேட்டு விழுந்திருக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர அனுமதிக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், சிறிதும் பெரிதுமாக சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா கூட்டணி’ உருவானது. பாட்னா, பெங்களூர், மும்பை வரிசையில் அண்மையில் டெல்லியில் கூடி, தங்களது நோக்கங்களை இந்த கூட்டணியின் தலைவர்கள் விவாதித்துள்ளனர். தங்களுக்கு அச்சுறுத்தலாகும் இந்தியா கூட்டணியை கலைக்க பாஜகவும் முயன்று வருகிறது. அதற்கு அவசியமின்றி இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்களே தங்களுக்குள் அடித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதற்கான முதல் வேட்டு மேற்கு வங்கத்தில் விழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பியான அதிர் ராஜன் சௌத்ரி, திரிணாமூல் காங்கிரஸை கடுமையாக தாக்கி உள்ளார். “ஊழலில் ஊறிய திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. புற்றுநோய் பீடித்தது போன்று திரிணாமூல் காங்கிரஸ் தவித்து வருகிறது. வங்கத்தில் கிட்டத்தட்ட இந்த கட்சி அழிந்து விட்டது” என சாடினார். இதற்கு பதிலடி தந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷ், “வங்காள காங்கிரஸின் ஒரு பிரிவினர் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள். காங்கிரஸ் டெல்லி தலைமை அதை கவனிக்க வேண்டும். மம்தா பானர்ஜி பாஜகவை வேரோடு அகற்ற காங்கிரஸுடன் ஒத்துழைக்கிறார். ஆனால் மேற்கு வங்க காங்கிரஸ் ஏறுமாறாக செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியா கூட்டணியின் சீட்டு ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மாநில காங்கிரஸ் அதனை அலட்சியப்படுத்தி வந்தது. திரிணாமூல் காங்கிரஸ் உடன் கூட்டணியை விரும்பாத அதிர் ராஜன் சௌத்ரி போன்றவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு, திரிணாமூல் கட்சியை தாக்கி உள்ளார். இது மம்தா ஆதரவாளர்களை வெகுவாக சீண்டி உள்ளது. மம்தா கண்ணசைத்தால் காங்கிரஸ் மீது பாய அவர்கள் தயாராக உள்ளனர். இந்தியா கூட்டணிக்கு சேதாரம் சேர்க்கும் முதல் வெடிப்பு மேற்கு வங்கத்தில் விழுந்ததில் பாஜகவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த மோதல் அடுத்தக்கட்டத்துக்கு வளரவும், அது பெரியளவில் கூட்டணிக்குள் மோதலை உருவாக்கவும் அவர்கள் காத்துள்ளனர்.