தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.சென்னையில் இன்று மாலை திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழி திரையுலகில் இருந்தும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். திரையுலகமே திரண்டு முன்னால் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறது.
தமிழ் திரையுலகை தனது வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து இன்று ஜனவரி 6ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிறப்பாக நடத்த உள்ளது.அதன்படி, தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா பிரம்மாண்டமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், இயக்குநர் சங்கம் சார்பில் லிங்குசாமி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முரளி ராமநாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒன்றிணைந்து வழங்கியுள்ளனர். நாளை கலைஞர் நூற்றாண்டு விழா 6 மணி நேரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், கருணாநிதி வசனம், பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள், ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நடைபெற உள்ளன.
இந்தவிழாவை பிரம்மாண்டப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து ட்ரோன்கள், பிரம்மாண்டமான ஷோக்கள், 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய மேடை, 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் இருக்கைகள், 50க்கும் மேற்பட்ட எல்.இ.டி திரைகள் என அனைத்து ஏற்பாடுகளும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில், பெப்சி பணியாளர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருக்கும் நடிகர் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சந்தேகம் என கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மொத்தம் 6 மணி நேரம் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.