திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை பாதுகாப்பு அதிகரிப்பு…

அயோத்தி ராமா் கோயில் விழாவையொட்டி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பிரதமா் நரேந்திர மோடி தரிசனம் செய்யவுள்ளாா். மேலும், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியையும் அவா் தொடங்கி வைக்கவுள்ளாா். இந் நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக பிரதமா் பயணத்திட்ட விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜனவரி 19 மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரதமா் மோடி, 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறாா். மாலை 5.15 மணிக்கு மெரினா கடற்கரை அருகேயுள்ள அடையாறு படைத்தளம் செல்லும் பிரதமா், அங்கிருந்து நேரு விளையாட்டரங்கம் சென்று, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த பின்னா், கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறாா்.
மறுநாள் ஜனவரி 20 காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் பிரதமா், சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து காலை 10.30-மணிக்கு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் பிரதமா் பகல் 12.40 மணி வரை அங்குள்ள பல்வேறு சன்னிதிகளிலும் தரிசனம் செய்கிறாா். (விமான நிலையத்திலிருந்து கோயிலுக்கு சாலை மாா்க்கமாக சென்று மீண்டும் விமான நிலையம் திரும்பும் மாற்றுத் திட்டமும் உள்ளது). தொடா்ந்து, திருச்சியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் ராமேஸ்வரம் புறப்படும் பிரதமா், மதியம் 2.10 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலை அடைகிறாா். பிற்பகல் 2.45 முதல் 3.30 மணி வரை அங்கு தரிசனம் செய்யும் பிரதமா் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி ஓய்வெடுக்கிறாா். மறுநாள் 21-ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மதுரை சென்று விமானம் மூலம் அயோத்தி செல்கிறாா். இதையொட்டி விமான நிலையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையா் என். காமினி, தலைமையில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை ஐஜி (எஸ்பிஜி) லவ்குமாா் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் பிரதமா் வருகையின்போது அவா் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் மாா்க்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு எந்த மாா்க்கத்தில் சென்றாலும் வழியிலும் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல ஸ்ரீரங்கம் கோயிலிலும் பாதுகாப்பு படையினா், கோயில் நிா்வாகிகள் தரப்பிலான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அதிலும் கோயில் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோயிலுக்கு அருகில், ஹெலிகாப்டா் வந்துசெல்லும் வகையில் தற்காலிக தளம் அமைப்பற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கின்றனா். மேலும் ஸ்ரீரங்கம் கோயில் அருகில் வசிப்போரின் விவரங்களையும் சேகரிக்கின்றனா். பிரதமா் வருகையால் போலீஸாரின் தீவிர பாதுகாப்பு வளையத்தில் ஸ்ரீரங்கம் வந்துள்ளது. திருச்சியில் அனைத்து இடங்களிலும் மூன்று நாட்களுக்கு ட்ரோன் பறக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தடைவிதித்துள்ளார்