தோழியாக பழகி இளம் பெண்ணிடம் பல லட்ச ரூபாய் மோசடி கோவையில் தம்பதி உட்பட மூவருக்கு போலீஸ் வலை

தோழியாக பழகி இளம் பெண்ணிடம் பல லட்ச ரூபாய் மோசடி கோவையில் தம்பதி உட்பட மூவருக்கு போலீஸ் வலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் லத்திகேஸ்வரி ( 31). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார் . கடந்த 2016 ஆம் ஆண்டு பி.காம் சி.எஸ் தேர்வு எழுதுவதற்காக ஈரோடு சென்ற போது அங்கு தேர்வு எழுத வந்த சசிகுமார் என்பவரின் மனைவி வனிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது . இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். வனிதா கோவை சுப்பிரமணியம் பாளையத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லத்திகேஸ்வரி கார் வாங்க முடிவு செய்தார். அப்போது வனிதா தன்னுடைய உறவினர் சேலத்தில் கார் நிறுவனம் நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனத்தில் வனிதா பெயரில் வாகனத்தை வாங்கினால் அதிக அளவில் தள்ளுபடி கிடைக்கும் என்றும் நம்பும் படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து லத்திகேஸ்வரி தனது வங்கி கணக்கிலிருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை வனிதாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து காரை முன்பதிவு செய்துள்ளார் .தொடர்ந்து வனிதாவின் பெயரில் காரை வாங்கி லத்திகேஸ்வரி ஓட்டி வந்தார் .மேலும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காருக்குரிய தவணைத் தொகையை லத்திகேஸ்வரி செலுத்தி வந்தார். 2021 ஆம் ஆண்டு வனிதா தன்னுடைய அண்ணன் முரளி என்பவர் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருவதாகவும் அதில் 5½ லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால் மாதம் 27 ஆயிரத்து 500 ரூபாய் லாபமாக கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து லத்திகேஸ்வரி வங்கி கணக்கு மூலமாக வனிதாவின் அண்ணன் முரளி வங்கி கணக்கிற்கு 5½ லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார் .இந்த சூழலில் லத்தேஸ்வரியின் தந்தை நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்த வீடு ஏலத்திற்கு வந்து வங்கி அதனை எடுத்துக் கொண்டது .அப்போது லத்திகேஸ்வரி தனக்கு சொந்தமான பொருட்களை எங்கு பத்திரமாக வைப்பது என யோசித்துள்ளார் .அந்த சமயத்தில் வனிதா தனது வீட்டில் பொருள்களை பத்திரமாக வைத்துக் கொள்வதாக கூறியுள்ளார் .அந்த நம்பிக்கையில் லத்திகேஸ்வரி 21 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய விலை மதிப்புள்ள சீர் வரிசை பொருள்களை வனிதாவின் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்தார். இதைத்தொடர்ந்து லத்திகேஸ்வரி பொள்ளாச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கோவை வரும் போது வனிதாவின் வீட்டில் தங்குவது லத்தேஸ்வரியின் வழக்கம் .இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வனிதா தனது காரை லத்திகேஸ்வரி திருடிச் சென்று விட்டதாக துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பொய்யாக புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார் காரின் ஆவணங்களில் வனிதாவின் பெயர் இருப்பதாக கூறி காரை வனிதாவிடம் ஒப்படைக்குமாறு லத்திகேஸ்வரியிடம் கூறியுள்ளனர் . இதனால் லத்திகேஸ்வரி தனது காரை
வனிதாவிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து லத்திகேஸ்வரியின் பொருள்களை வனிதா திருப்பித் தருவதாக கூறியிருக்கிறார் .ஆனால் பொருட்களை திருப்பித் தராமல் வனிதா மற்றும் அவரது குடும்பத்தார் தாமதப்படுத்தி வந்தனர் .இந்நிலையில் சுப்பிரமணியம் பாளையத்தில் இருந்த வீட்டை வனிதா திடீரென காலி செய்து விட்டு தலைமறைவானார் .தொடர்ந்து லத்திகேஸ்வரி துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .ஆனால் அவரது புகாரை போலீசார் பெற மறுத்து விட்டனர் .தொடர்ந்து செல்போன் மூலம் லத்திகேஸ்வரி வனிதாவை தொடர்பு கொண்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து லத்திகேஸ்வரி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வனிதா அவரது கணவர் சசிகுமார் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறிய முரளி ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும் வனிதா உள்ளிட்டோர் ஈரோட்டில் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.