ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் சுந்தர் மஹால் அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ், விமல் பான் மசாலா உள்ளிட்ட 24 கிலோ எடையுள்ள ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் சத்தியமங்கலம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (எ) முகமது யூசுப் (24), சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (19) என்பதும், இவர்கள் இருவரிடம் தாளவாடியைச் சேர்ந்த அஜ்மல் என்பவர் சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே குட்கா பொருட்களை கொடுத்து சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய கூறியதாகவும், அதன் பேரில் குட்கா பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். குட்கா பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக தாளவாடியைச் சேர்ந்த அஜ்மல் என்பவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.