டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 11 ரூபாய், டீசலுக்கு 6 ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.
எனவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை சுமார் 600 நாட்களுக்கு மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது. இதற்கு காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து கொண்டே வந்தது தான் முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்கிறதோ அல்லது குறைகிறதோ அதன் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சர்வதேச சந்தையில் விலை உயரும் போது வேகமாக உயர்த்தப்படும் விலை, சர்வதேச சந்தையில் விலை குறையும் போது குறைக்கப்படுவது இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக லாபம் சந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் உடனடியாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுவது இல்லை.இது தான் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
அதேநேரம் கடந்த ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கியதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலருக்கு மேல் சென்றது. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. சுமார் 600 நாட்களை கடந்து பெட்ரோல்-டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.102, டீசல் விலை சுமார் ரூ.94 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக பீப்பாய் ஒன்றுக்கு 80 டாலருக்கு கீழே விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.11, டீசல் ரூ.6 என்ற அளவில் லாபம் சம்பாதித்து வருகின்றன.
இது ஒருபுறம் எனில், லிபியா, நார்வே போன்ற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் தேவைக்கு அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த போக்கு வரும் 2025-ம் ஆண்டு மார்ச் வரை இருக்கும் என வல்லுனர்கள் கணித்து உள்ளனர்,
இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்திற்கு பெட்ரோல் டீசல் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.