சென்னை: தேமுதிக தலைமையகத்தில் கட்சிக் கொடியேற்றி மக்களவைத் தேர்தல் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடல் டிச.29-ம் தேதி மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேநேரம், விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து, கட்சிப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேமுதிக கட்சிக் கொடியும் கடந்த ஒரு மாதமாக அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இதனை முழுமையாக ஏற்ற வேண்டும் என நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள தேமுதிக அலுவலகங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன் பகுதியாக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் தேமுதிக கொடியை பிரேமலதா ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: தேமுதிக கொடியேற்றும்போது கயிறு அறுந்து கொடி கீழே விழுந்துவிட்டது. ஒரு தடைக்கு பிறகுதான் மிகப்பெரிய வெற்றி இருக்கும் என்பார்கள்.அதன்படி தடைகளை உடைத்தெறிந்து லட்சியத்தை நிச்சயம் அடைவோம். விஜயகாந்த் நினைவு அன்னதானம் அறக்கட்டளை தொடங்கி நினைவிடத்துக்கு வருவோருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க இருக்கிறோம். பல்வேறு உதவிகளை நிச்சயம் செய்வோம். மணிமண்டப கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்திருக்கிறோம். ஆனால் அதற்கான ஆணை வழங்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கான அன்னதானம், உதவிகள் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏழைகள் வாழ பாடலை பாடி பிரேமலதா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தனது இல்லத்திலும் பிரேமலதா கட்சிக் கொடியேற்றினார். நிகழ்வில், தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.