கோவை : கர்நாடக மாநிலம் மங்களூரூ ,ஹோய் பால்ரோட்டை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 24) மளிகை சாமான்கள் மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபா, சந்திரசேகர், பிரேம், உசேன், சாய்நிதி ஆகியோருக்கும் இடையே வியாபாரம் ரீதியான அறிமுகம் இருந்தது. அப்போது அவர்கள் தாங்கள் மஞ்சள் ,பூண்டு, ஏலக்காய் உள்ளிட்ட மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வருவதாக சஞ்சயிடம் கூறினார்கள். மேலும் தங்களுக்கு அதிக அளவு ஏலக்காய் தேவைப்படுவதால் அதை அனுப்பி வைக்குமாறும் ஏலக்காய் பெற்றுக் கொண்டதும் பணம் கொடுப்பதாகவும் கூறினார்கள். இதை யடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சஞ்சய் ரூ. 23 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஏலக்காயை சாக்கு மூட்டையில் அடைத்து லாரி மூலம் தீபா, சந்திரசேகர், பிரேம், உசைன், சாய்நிதி ஆகியோர் கூறிய கோவை புதூரில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஏலக்காயை பெற்றுக் கொண்ட அவர்கள் சஞ்சய்க்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்க காலதாமதம் செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து சஞ்சய் பலமுறை அவர்களிடம் பணத்தை கேட்டதால் ரு 8 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். ஆனால் மீதமுள்ள ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவில்லை. இந்த தொகையை வழங்க கோரி அவர் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் தான் மோசடிக்கு உள்ளானதை அறிந்த சஞ்சய் இதுகுறித்துகுனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தீபா, சந்திரசேகர் ,பிரேம், உசேன் சாய் நிதி ஆகிய 5 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.