கொடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விசாரணை.!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தது. மேலும், இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் பின்னர் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய பலரையும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய 8 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர். இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்கள் 2 ஆண்டுகள் மட்டுமே சேமித்த வைக்கும் வசதி உள்ளதாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக சர்வரில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொலை நடந்த காலகட்டத்தில் பதிவான தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆய்வு செய்ய சிபிசிஐடி எஸ்.பி மாதவன் தலைமையில் இரண்டு தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 10 பேர் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். செல்போன் டவர்களில் பதிவான உரையாடல்களை சேகரித்து விசாரணை செய்தும் வருகின்றனர்..