கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பூங்கொடி ( வயது 65) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். குமரேசன் இறந்துவிட்டதால் பூங்கொடி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு ரமேஷ் என்பவர் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் ரமேஷ் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். மேல் தளத்தில் பூங்கொடி மட்டும் தனியாக இருந்தார். காலை 11 மணியளவில் பூங்கொடி வீட்டில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அவர் கதவை திறந்து பார்த்தார். அப்போது வெளியே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நீ யார்?என்ன வேண்டும்? என்று கேட்டார். அந்த நபர் மூதாட்டியை வீட்டிற்குள் தள்ளி கதவை உள் பக்கமாக பூட்டினார் .தொடர்ந்து மூதாட்டியின் கை – கால்களை கயிற்றால் கட்டினார். கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் என மொத்தம் 13 பவுன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கு இடையில் பூங்கொடி பயத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். இதனை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கபட்டது. அடிப்படையினர் ஜோதிபுரத்தைச் சேர்ந்த மரியன் என்ற டான்போஸ்கோ (வயது 57) என்பவரை கைது செய்தனர். 13 பவுன் நகைகள் மீட்க்கப்பட்டது.கொள்ளையனை துரிதமாக கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.