கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அருள்ஜோதி நகரிலும், உடுமலை ரோடு பி.ஏ.பி. அலுவலகம் அருகிலும் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த ஆசாமி ஒருவர் தங்க நகைகளை பறித்து சென்றார்.
இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரது உருவம் பதிவாகி இருந்தது . அவர் யார்? என்று விசாரித்த போது சபரிகிரி ( வயது 41) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதும், வால்பாறை டி.எஸ்.பி அலுவலகத்தில் அவரது மனைவி போலீசாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது பெண்களிடம் நகை பறித்ததை அவர் ஒப்புக் கொண்டார். அதோடு கடந்த 23ஆம் தேதி செட்டிபாளையம் பகுதியில் ஒரு பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை பறித்ததும் இவர்தான் என்பது தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவருக்கு வேறு ஏதேனும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு போலீஸ் ஏட்டு சபரிகிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று உத்தரவிட்டார்..