பாஜகவுடன் தமாகா கூட்டணி – ஜி.கே வாசன்.!!

சென்னை: பா.ஜ., உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உடன் பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (பிப்.,27) பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரவிந்த் மேனன் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று நாளை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து நாங்கள் பா.ஜ., கூட்டணியில் இடம்பெறுகிறோம்.

பா.ஜ., ஆட்சி அமைந்தால்., இந்திய பொருளாதாரம், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம். பா.ஜ., தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் உழைக்கும். வளமான பாரதம் அமைய விரும்பும் கட்சிகள் அனைத்தும் பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும். தமிழ் மொழி, தமிழகம், தமிழர்களை மத்திய அரசு விரும்புகிறது.

மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அதன்படி, மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதும், இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. படித்தவர்கள், இளைஞர்கள் பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர். பா.ஜ.,வின் செயல்பாடுகளை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழிலுக்கு பா.ஜ., அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.திமுகஅரசு தவறிவிட்டதுஇந்தியாவிலேயே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் கட்சி திமுக. சாதாரண மக்களின் எண்ணங்களை திமுக அரசு பிரதிபலிக்க தவறிவிட்டது.ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளுடன் நட்பு அடிப்படையில் கூட்டணி குறித்து பேசி வருகிறேன். அவர்கள் எல்லாம் மீண்டும் கூட்டணியில் இணைந்தால் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்கள். அதிமுக முடிவில் தலையிட விரும்பவில்லை.

அவரவர் முடிவு, அவரவர் கொள்கை அடிப்படையில் இருக்கும். விரைவில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று அனைத்தும் நிறைவுபெறும். அனைத்து கட்சிகளும் இணைந்ததும் தொகுதி பங்கீடு முழு வடிவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.