30 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு புதிய சட்டம் உள்ளிட்ட 5 அம்ச வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி ராகுல் காந்தி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கிழக்கில் உள்ள மாநிலங்களை நோக்கி பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயுடன் அவர் யாத்திரையில் பங்கேற்றார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “நாடு முழுவதும் 30 லட்சம் அரசு வேலைகள் காலியாக இருப்பதை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் இவற்றை நிரப்பமாட்டார்கள். எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 90 சதவீத காலி பணியிடங்களை நிரப்புவோம். அடுத்ததாக 25 வயதுக்கு உட்பட்ட டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஒரு லட்சம் உதவி தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் வெளிப்படைத் தன்மையுடன் போட்டி தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர்தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச் சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். அதேபோல் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வேலை உத்தரவாத திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி அரசு, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் அதனால் இரண்டு மூன்று பெருங் கோடீஸ்வரர்கள் மட்டும் பலன் அடைந்தனர். எனவே புதிய தொழில் தொடங்குவதற்கு உதவிடும் வகையில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொழில் துவங்க முனைவோர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு யுவ ரோஷினி என்று பெயர் வைக்கப்படும்” என்றார்.