போதை கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது ED வழக்குபதிவு.!!

போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தியுள்ளார். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி. டெல்லியில் தனது ஆட்கள் சிக்கியதும் ஜாபர் சாதிக் தலைமறைவானார்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக்கிற்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போதை பொருள் தடுத்த பிரிவு அதிகாரிகள் ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து சென்னை கொண்டு வந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுகவைச் சேர்ந்த முக்கிய நபருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறையும் நிதிமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரிடம் விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையில், போதை பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் யார் யாரெல்லாம் ஆதாயம் அடைந்தார்கள் என்ற விவரத்தை அதிகாரிகள் சேகரித்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.