மத்தியில் நமக்கு சாதகமான ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டில் இன்னும் 10 மடங்கு சாதனை செய்ய முடியும் – பொள்ளாச்சி அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

பொள்ளாச்சி: மத்தியில் நமக்கு சாதகமான ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் இன்னும் 10 மடங்கு கூடுதலாக சாதனைகளை செய்ய முடியும் என பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சிஆச்சிபட்டியில், கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ.1,274கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 273 நிறைவுற்ற திட்டப் பணிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார்.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 3 ஆண்டு கால திராவிட மாடல்ஆட்சி சாதனைகளாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிருக்கு விடியல் பயணம், புதுமைப்பெண், பள்ளிகளில் காலை உணவு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, மக்களுடன் முதல்வன், நீங்கள் நலமா? ஆகிய திட்டங்கள் உள்ளன.

கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதல்வர் நான். உங்கள் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்பவன். அதனால்தான் ‘நீங்கள் நலமா?’திட்டத்தைக் கொண்டு வந்துள்ளேன். மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில்வளம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் வளருகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது.

இவற்றைப் பார்த்து பொறாமைப்பட்டு சிலர் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது. நம் தமிழை, தமிழ்நாட்டை, நமது பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது.

மக்களை ஏமாற்ற நாடகம்: மக்களை மறுபடியும் ஏமாற்ற, பிரிந்தது போல நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழர் நலனுக்கு எதிரான அதிமுக – பாஜக என்ற கள்ள கூட்டணிக்கு எதிராக, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் திமுக கூட்டணியில் ஒற்றுமையாக நிற்கிறோம். நமக்கு உதவி செய்யும் மத்திய ஆட்சி அமைந்தால் இன்னும்10 மடங்கு கூடுதலாக சாதனைகளைச் செய்ய முடியும்.

பாஜக திட்டங்களை திமுக தடுக்கிறது என பிரதமர் சொல்கிறார். எந்தத் திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை. எய்ம்ஸ்மருத்துவமனையை யாரும் எதிர்க்கவில்லை. ஆனாலும் இன்னும் கொண்டு வரவில்லை. பொய்யும், வாட்ஸ்அப் வதந்திகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு. அவை தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. உண்மையான வளர்ச்சியை நமது நாடுகாண, பாசிசத்தை வீழ்த்த, தமிழ்நாட்டை உயர்த்த, இந்தியாவை காக்க உங்களை அழைக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ வேலு, சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கா.ராமச்சந்திரன், என்.கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர். நடராசன், கே.சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.