கோவை மாவட்டம் : அன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மொபைல் கடையில் சுவரில் துளையிட்டு 7 விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போனது. இது தொடர்பாக அன்னூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட எதிரியை பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் (பொறுப்பு) மேற்பார்வையில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையில் அன்னூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கௌதம் போலீஸ்காரர்கள் கருணாகரன்
குருசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சி.சி.டி.வி. ஆதாரங்களை கொண்டும் சைபர் கிரைம் உதவியுடனும் தேடி வந்தனர் . இந்த நிலையில் அந்த பகுதியில் சந்தேகப்படும்படி பதுங்கி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் தான் இந்த கொள்ளையை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பக்கம் உள்ள குச்சனூரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) என்பது தெரிய வந்தது . இவர் தற்போது இடிகரை பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது தென்காசி , ஈரோடு, திருப்பூர், துடியலூர் கோவை ,தேனி சின்னமனூர் ஆகிய இடங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவரிடமிருந்து செல்போன்கள் மீட்கப்பட்டன. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..