கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த, 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், 28, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, மொத்தம், 14 பேரை கைது செய்தனர். இந்நிலையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்துடனான தொடர்பு குறித்து புதிதாக ஒரு வழக்கும் பதிந்து விசாரித்து, பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு சோதனை மேற்கொண்டதில் பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, 52, கோவை பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன் பைசி, 38, குனியமுத்துாரை சேர்ந்த இர்ஷாத், 22, மற்றும் ஜமீல் பாஷா உமரி, 30, ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்துடனான தொடர்பில் இருந்தது தெரிந்தது. அதில் சையது அப்துல் ரகுமான் உமரி, கோவை அரபி கல்லுாரியில் பேராசிரியராகவும் மற்றவர்கள் அவரிடம் மாணவர்களாகவும் படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. கார் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே, 14 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் நான்கு பேர் கைதாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி, 4 பேரை காவலில் எடுத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் அவர்களை கோவை அழைத்து வந்தனர். கோவையில் அவர்கள் படித்து வந்ததாக கூறப்படும் அரபி கல்லுாரி, தொழுகை நடத்திய ஆசாத் நகர், போத்தனுாரில் உள்ள இஸ்லாமிய கல்வி மையம் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அவர்களை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வாளகத்தில் தற்காலிக என்.ஐ.ஏ., அலுவலகத்திற்கு கூட்டி சென்று விசாரித்து வருகின்றனர்.