கோவையில் புதிதாக திறந்த நகைக் கடைகளில் 50 பவுன் தங்க நாணயங்கள் திருடிய வாலிபர் கைது!!!

கோவையில் புதிதாக திறந்த நகைக் கடைகளில் 50 பவுன் தங்க நாணயங்கள் திருடிய வாலிபர் கைது

கோவை, சொக்கம்புதூரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது 44). இவர் ஆர்.எஸ்.புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நகைக் கடை திறந்தார். அந்த கடையில் நெல்லை மாவட்டம் ராவணசமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவர் வேலை செய்து வந்தார். இதற்காக அவர் அந்த நகைக் கடையின் மேலாளர் பிச்சாண்டியுடன் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடையை சுத்தம் செய்வதாக கூறி விட்டு பிச்சாண்டியிடம் இருந்து நகைக் கடையின் சாவியை முத்துக்குமார் வாங்கி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பிச்சாண்டி அங்கு சென்ற போது முத்துக்குமாரை காணவில்லை. கடையில் இருந்த லாக்கர் திறக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த லாக்கரில் பார்த்த போது அதில் இருந்த 50 பவுன் தங்க நாணயங்களை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.27 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப் படையினர் அந்த நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அங்கு வேலை செய்து வந்த முத்துக்குமார் தான் லாக்கரை திறந்து அதில் இருந்த தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முத்துக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்த 50 பவுன் தங்க நாணயங்களையும் மீட்டனர். இந்த திருட்டு நடந்த 2 நாட்களுக்குள் திருடிய நபரை கைது செய்ததுடன், தங்க நாணயங்களையும் மீட்ட போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.