ரூ.2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல் – அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 6 பேர் கைது.!!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முத்திப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்குகூடாரத்தில் சோதனை செய்தனர். அப்போது சுமார் 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நூர்ஜஹான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா காதுன் (40) இத்ரிஷ் அலி மனைவி ஜஹீராகா துன்(29) எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி(29) அலிஹீசைன் மனைவி குதிஜா கா துன்(37), மன்சூர் அலி மகன் அலிஹீசைன்(48) மற்றும் குத்தூஸ் அலி மகன் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் அசாம் மாநிலத்தில் இருந்து இந்த போதை பொருளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. பி‌ன்ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..