திருச்சியில் இரவிலும் பகலிலும் கொட்டி தீர்த்த கனமழை.!!

தமிழகத்தில் பரவலாக கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது வியாழக்கிழமை காலை வரை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்து பூமியைக் குளிரச் செய்தது.
மழையானது கடந்த சில நாள்களாக அனலில் தவித்த மாவட்ட மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிகாலை சாரல் மழையாக இடைவிடாது பெய்ததால், மழையில் நனைந்தபடியே சில்லரை வியாபாரிகள் காந்தி சந்தைக்கு வந்து பொருள்களை வாங்க வேண்டியிருந்தது. சாலையோரம் கடைவிரித்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
மழை காரணமாக மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் சற்று தேங்கின. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் பரவலாக இடைவிடாது லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது.
வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).
கல்லக்குடி- 4.1, லால்குடி- 4.3, நந்தியாறு தலைப்பு- 2.6, புள்ளம்பாடி- 5.2, தேவிமங்கலம்- 29.4 சமயபுரம்- 28, சிறுகுடி- 25.8, வாய்த்தலை அணைக்கட்டு- 12.8, மணப்பாறை- 4.2, பொன்னியாறு அணை- 17.4, மருங்காபுரி- 32.4, முசிறி- 3, புலிவலம்- 13, தாத்தையங்காா்பேட்டை- 2, நவலூா்குட்டப்பட்டு- 35.5, துவாக்குடி- 10.1, தென்புாடு- 1, துறையூா்- 12, பொன்மலை- 26.8, திருச்சி விமான நிலையம்- 7.8, திருச்சி ஜங்ஷன்- 16.3, திருச்சி நகரம்- 13 மி.மீ. என மாவட்டம் ழுவதும் மொத்தமாக 306.8 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 12.78 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சில நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. திருச்சி மக்கள் மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.