சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட மணல் குவாரிகளில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது.
வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம். அதை விடுத்து மீண்டும் குவாரிகளை திறப்பது காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தர பாலைவனமாக மாற்றிவிடும். தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.