வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் எதிரொலி… 13 ஆயிரம் பறவைகளை கொல்ல கேரள அரசு முடிவு.!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வளர்ப்புப் பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கேரள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தழக்கரா, தலவடி சம்பக்குளம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் ஆகிய இடங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் மற்றும் கோழிகள் திடீரென செத்தன. அதைத்தொடர்ந்து ரத்த மாதிரியை பரிசோதித்தபோது அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் வாத்து, கோழி உள்பட 13 ஆயிரத்திற்கும் அதிகமான அனைத்து வளர்ப்புப் பறவைகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.